மூன்று நாடுகளுக்கான பயணத் தடையை மேலும் 90 நாட்களுக்கு நீட்டித்தது கனடா
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்டுள்ள எபோலா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு, கனடா விதித்துள்ள பயண மற்றும் குடிவரவுத் தடைகளை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிப்பதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
எபோலா நோய் கனடாவிற்குள் நுழைவதையும், பரவுவதையும் தடுக்கும் நோக்கிலேயே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைமுறையில் வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தரவுகளின்படி, இந்த எபோலா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,000-ஐ கடந்துள்ளதுடன், 5,900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக, உகாண்டா, தெற்கு சூடான் மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் கனடாவிற்குப் பயணம் செய்வதற்குக் கடந்த மே மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் காலாவதியாகவிருந்த இந்தத் தடை உத்தரவு, தற்போது எதிர்வரும் 2027 பெப்ரவரி 25 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த மூன்று நாடுகளையும் சேர்ந்தவர்களுக்கான செல்லுபடியாகும் வீசாக்கள் மற்றும் பயண அனுமதிப் பத்திரங்கள் உள்ளிட்ட குடிவரவு ஆவணங்கள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.