2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக யோர்க்டன் நகருக்குச் சென்ற கனடா பிரதமர்!
கடந்த 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக, பதவியில் இருக்கும் கனடா பிரதமர் ஒருவர் சஸ்காட்சுவான் மாகாணத்தின் யோர்க்டன் நகருக்கு விஜயம் செய்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள யோர்க்டன்-மெல்வில் தொகுதி இடைத்தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் யோர்க்டன் நகர மேயர் ஆரோன் கின்லியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காகவே பிரதமர் மார்க் கார்னி அங்கு சென்றிருந்தார்.
யோர்க்டனிலுள்ள 'டியர் பார்க் கோல்ஃப் மைதானத்தில்' சுமார் 240 ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் கார்னி, “ஆரோன் கின்லி ஒரு அசாதாரணமான நபர்; ஒட்டாவாவில் எம்முடன் இணைந்து பணியாற்றுவதற்கு இத்தகைய ஒருவரே எமக்குத் தேவை. இது யோர்க்டன், மெல்வில், சஸ்காட்சுவான் மற்றும் எமது நாட்டிற்கு மிகவும் முக்கியமான காலகட்டமாகும்” எனத் தெரிவித்தார்.

1910 ஆம் ஆண்டுக்குப் பின்னர் லிபரல் பிரதமர் ஒருவர் யோர்க்டன் நகருக்கு வருவது இதுவே முதல்முறை எனக் குறிப்பிட்ட கார்னி, கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்டையாக விளங்கும் சஸ்காட்சுவானில் மாற்றத்தை ஏற்படுத்த லிபரல் கட்சி வித்தியாசமான அணுகுமுறையைக் கையாண்டு வருவதாகக் கூறினார்.
வடக்கு சஸ்காட்சுவானின் மெக்கில்வென்னா பே செப்புச் சுரங்கத் திட்டம் மற்றும் மேயர் கின்லியின் விடாமுயற்சியால் ஒட்டாவாவிலிருந்து நிதி ஒதுக்கீடு பெறப்பட்ட யோர்க்டன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் புனரமைப்புத் திட்டம் ஆகியவற்றை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
“கடந்த 11 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஒருவரால் எமக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுத்தர முடியவில்லை. எனவே, அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு சமூகத்திற்குப் பலன்களைப் பெற்றுத்தரும் ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்” என லிபரல் வேட்பாளர் ஆரோன் கின்லி வலியுறுத்தினார்.
கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கேத்தி வாகன்டால் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.