பிரேசிலில் அருவிபோல் கீழிறங்கிய மேகங்கள் ; வைரலாகும் அரிய காட்சி
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிறிஸ்து மீட்பர் சிலையைச் சுற்றி, மலையிலிருந்து அருவிபோல் மேகங்கள் கீழிறங்கிய அரிய இயற்கைக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கடந்த வார இறுதியில் கோர்கோவாடோ மலையில் நிகழ்ந்த இந்தக் காட்சியை நிழற்படக் கலைஞரும் திரைப்பட இயக்குநருமான மார்சியோ அமரோ தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

கடல் பகுதியிலிருந்து வரும் ஈரப்பதமான காற்று மலையின் சரிவுகளில் மேலெழுந்து குளிர்ச்சியடைவதால் அடர்த்தியான மேகங்கள் உருவாகின்றன.
பின்னர் அவை மலையின் மறுபுறம் கீழிறங்கும்போது அருவிபோல் காட்சியளிக்கின்றன. வானிலை அறிவியலில் இது 'ஓரோகிராபிக் மேகம்' (Orographic Cloud) என அழைக்கப்படுகிறது.
இந்தக் காட்சியில் கிறிஸ்து மீட்பர் சிலை அமைந்துள்ள மலையின் உச்சி மட்டும் தெளிவாகத் தெரிய, வெள்ளை நிற மேகங்கள் மலையின் சரிவுகளில் நீர்வீழ்ச்சிபோல் வழிந்தோடியுள்ளன.
இந்த நிழற்படம் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது அல்ல, உண்மையான இயற்கைக் காட்சி என நிழற்படக் கலைஞர் தெரிவித்துள்ளார்.
ரியோ டி ஜெனிரோவின் இயற்கை அழகை மேலும் மெருகூட்டியுள்ள இந்த அரிய காட்சி தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.