மணிக்கு 603 கி.மீ. வேகத்தில் பயணித்து உலக சாதனை படைத்த ஜப்பானின் மிதவை ரயில்
ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ள ‘எஸ்சிமெக்லவ்’ (SCMaglev) எனப்படும் மின்காந்த மிதவை ரயில், சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 603 கிலோமீற்றர் வேகத்தை எட்டி உலக சாதனை படைத்துள்ளது.
உலகின் அதிநவீன போக்குவரத்துத் தொழில்நுட்பங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ரயில், வழக்கமான ரயில்களைப் போன்று தண்டவாளத்தில் சக்கரங்களின் உதவியுடன் பயணிப்பதில்லை.
மாறாக, மின்காந்த சக்தியின் மூலம் தண்டவாளத்திலிருந்து சுமார் 10 சென்டிமீற்றர் உயரத்தில் மிதந்தபடி பயணிக்கிறது.
பொதுவாக மின்சார ரயில்கள் மேலே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகளிலிருந்து மின்சாரத்தைப் பெற்று, தண்டவாளத்தில் சக்கரங்களின் உதவியுடன் இயங்குகின்றன.

ஆனால், இந்த மிதவை ரயில் முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, மிகக் குறைந்த வெப்பநிலையில் செயல்படும் ‘சூப்பர் கண்டக்டிங்’ எனப்படும் மீள்கடத்தும் காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவை வலிமையான காந்தப் புலத்தை உருவாக்கி, ரயில் பாதையின் இருபுறங்களிலும் பொருத்தப்பட்டுள்ள மின்காந்தச் சுருள்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் ரயிலைத் தண்டவாளத்திலிருந்து உயர்த்தி மிதக்கச் செய்கின்றன.
மேலும், ரயிலை முன்னோக்கி நகர்த்துவதற்கு நேரியல் மின்மோட்டார் (Linear Motor) பயன்படுத்தப்படுகிறது.
ரயில் பாதையில் உள்ள மின்சாரச் சுருள்கள் உருவாக்கும் நகரும் காந்தப் புலம், ரயிலை முன்னோக்கி உந்திச் செலுத்துகிறது.
ஆரம்பத்தில் ரயில் வேகமெடுப்பதற்காக ரப்பர் சக்கரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தேவையான வேகத்தை எட்டியதும், அந்தச் சக்கரங்கள் மேல்நோக்கி மடங்கிக்கொள்ள, மின்காந்த மிதவைத் தொழில்நுட்பத்தின் மூலம் ரயில் தொடர்ந்து பயணிக்கிறது.
மின்காந்தவியல், மீள்கடத்தும் இயற்பியல் மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து இந்த மிதவை ரயில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்கால அதிவேகப் போக்குவரத்துத் துறையில் இத்தொழில்நுட்பம் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.