டொரொன்டோவில் பயங்கரம்: வீடு புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிரபல இசைக்கலைஞர் பலி
கனடாவின் டொரொன்டோ நகரிலுள்ள காசா லோமா பகுதிக்கு அருகே, புதன்கிழமை அதிகாலை வீடொன்றுக்குள் புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 39 வயதுடைய இசைக்கலைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் வாகனப் புகைப்படத்தை டொரொன்டோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
புதன்கிழமை அதிகாலை 2:30 மணியளவில், செயின்ட் கிளேயர் அவென்யூ வெஸ்ட் பகுதிக்கு அருகிலுள்ள பொப்லர் பிளெயின்ஸ் வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்தேகநபர்கள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

படுகாயமடைந்த 39 வயதான மைக்கேல் எக்கர்ட் என்பவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அந்த வீட்டின் உரிமையாளரின் மகன் எனவும், டொரொன்டோ இசைத்துறையில் நன்கு அறியப்பட்ட 'பெடல் ஸ்டீல் கிதார்' கலைஞர் எனவும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் கறுப்பு அல்லது அடர் நிற ஹோண்டா ரக நான்கு கதவுகளைக் கொண்ட செடான் காரின் புகைப்படத்தை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
குறித்த வாகனத்தில் குளிர்கால டயர்கள் மற்றும் உலோக விளிம்புகள் பொருத்தப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாததுடன், சந்தேகநபர்கள் குறித்த மேலதிக விபரங்களும் வெளியிடப்படவில்லை.
மைக்கேல் எக்கர்ட்டின் மரணம், 2026 ஆம் ஆண்டில் டொரொன்டோவில் பதிவான 37 ஆவது கொலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி பிரைடில் பாத் (Bridle Path) பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த முகமூடி அணிந்த கும்பலொன்று நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுடப்பட்ட சம்பவம் இடம்பெற்று ஒரு மாதத்திற்குள் இந்தப் படுகொலை நிகழ்ந்துள்ளது.