நெதன்யாகுவுக்கு எதிரான ஊழல் வழக்குகள் ; குற்றச்சாட்டுகளைக் கைவிட நீதிபதிகள் பரிந்துரை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஊழல் வழக்குகளில், முக்கியமான சில குற்றச்சாட்டுகளைக் கைவிடுவது குறித்து பரிசீலிக்குமாறு ஜெருசலேம் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் அரசுத் தரப்பு சட்டத்தரணிகளுக்குப் பரிந்துரைத்துள்ளனர்.
நெதன்யாகு மீது கடந்த 2019ஆம் ஆண்டு இலஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அவருக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவதற்காக ஊடக நிறுவனங்களுக்கு அரசாங்கச் சலுகைகளை வழங்கியதாகவும், ஹொலிவூட் தயாரிப்பாளர் அர்னோன் மில்சான் உள்ளிட்ட செல்வந்தர்களிடமிருந்து பெறுமதிமிக்க பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குச் சாதகமாகச் செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த வழக்குகள் மூன்று முக்கிய பிரிவுகளாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில், தொலைத்தொடர்பு நிறுவனமான Bezeq நிறுவனத்துக்குச் சாதகமான ஒழுங்குமுறைச் சலுகைகளை வழங்கியதற்குப் பதிலாக, தனக்கும் தனது மனைவிக்கும் சாதகமான ஊடகச் செய்திகளைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முக்கியமானதாகும்.
இந்த வழக்கில் குற்றத்தை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குறித்த வழக்கை முழுமையாகக் கைவிடுவது குறித்து அரசுத் தரப்பு பரிசீலிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளனர்.
அதேவேளை, மற்றொரு வழக்கில் ஊடக உரிமையாளர் ஒருவருடன் சாதகமான செய்தி வெளியீடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பேச்சுவார்த்தைகள் குற்றவியல் நடவடிக்கையாகக் கருதப்படுமா என்பது குறித்து நீதிபதிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனால் அந்த வழக்கையும் மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மூன்றாவது வழக்கில், செல்வந்தர்களிடமிருந்து விலையுயர்ந்த பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை விரைவாக முடிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்காக அரசுத் தரப்புக்கும் நெதன்யாகுவின் சட்டத்தரணிகள் தரப்புக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்தப் பரிந்துரைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நெதன்யாகு, தமக்கு எதிரான வழக்குகள் சரிந்துவிட்டதாகக் குறிப்பிட்டதுடன், விசாரணைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும், நீதிபதிகளின் கருத்துகள் இறுதித் தீர்ப்பாக அமையாது. வழக்குகளைத் தொடர்வதா அல்லது குற்றச்சாட்டுகளைக் கைவிடுவதா என்பது தொடர்பில் அரசுத் தரப்பும் சட்டமா அதிபரும் தீர்மானிக்க வேண்டியுள்ளது.
சட்டமா அதிபர் குறித்த பரிந்துரைகளை அரசுத் தரப்பு சட்டத்தரணிகளுடன் ஆராய்வதாகத் தெரிவித்துள்ளார்.
நெதன்யாகு தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருவதுடன், வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நீதிமன்றத்தின் தற்போதைய பரிந்துரைகள் அவரது சட்ட மற்றும் அரசியல் நிலைமையில் கவனத்தை ஈர்த்துள்ளன.