கனடா அரசுக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு!
கடந்த மாதம் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கனடா பிரஜை ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில், உண்மையான நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்ய வேண்டும் என கனடா அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
கனடாவின் ஒன்ராறியோ, வின்ட்சர் பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஹசன் ஹைதர் என்ற ஐந்து குழந்தைகளின் தந்தை, கடந்த ஏப்ரல் 10 அன்று லெபனானின் கானா கிராமத்தில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து விசாரிக்குமாறு கனடா அரசு இஸ்ரேலிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்தது. ஒரு கனடா பிரஜையின் மரணத்திற்கு வழிவகுத்த அனைத்துத் தகவல்களையும் நாங்கள் கோரி வருகிறோம் என தெரிவித்துள்ளது.

இந்த விஷயத்தில் அரசு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என வெளிவிவகார அமைச்சுர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டை இஸ்ரேலே விசாரிக்கும் என்ற கனடா அரசின் நிலைப்பாட்டை 'கனடா முஸ்லிம்களின் தேசிய கவுன்சில்' திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
எனினும் "குற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பு, தன் மீதுள்ள குற்றத்தையே விசாரிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. கனடா பிரஜை ஹசன் ஹைதர் 'இறக்கவில்லை', அவர் 'கொலை செய்யப்பட்டுள்ளார்'.
இதற்கு உண்மையான நீதியும் பொறுப்புக்கூறலும் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பதை நடுநிலையான ஒரு விசாரணை அமைப்பின் மூலம் கண்டறிய வேண்டும்.
ஹைதரின் கொலைக்குக் காரணமான இஸ்ரேலிய அதிகாரிகளிடமே இந்த விசாரணையை ஒப்படைத்தால், உண்மையான நீதி கிடைக்காது," என அந்த அமைப்பு மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளது.