அமெரிக்காவுக்கு பதிலடி: 700 பொருட்களுக்கு வரி விதித்த கனடா!
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரிக்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி விதிக்க கனடா தீர்மானித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த நிலையில், அமெரிக்கா திடீரென கனடா மீது 50 சதவீத வரியை விதித்தது.

அமெரிக்கா – கனடா உறவில் மேலும் விரிசல்
இதனால் ஏற்கனவே பதற்றமடைந்திருந்த அமெரிக்கா – கனடா உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கடுமையான நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த வர்த்தக முரண்பாடுகளுக்கு தீர்வு காணவும், அமெரிக்கா விதித்துள்ள வரியை தவிர்ப்பது தொடர்பிலும் வொஷிங்டனில் இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எனினும், அந்த பேச்சுவார்த்தையில் எந்தவொரு இறுதி உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனையடுத்து, கனடா மீது 50 சதவீத சுங்கவரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அத்துடன், கனடா தொடர்பில் கடுமையான விமர்சனங்களையும் அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை சுங்கவரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
இந்த புதிய வரி நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, அமெரிக்காவுடன் முன்னர் காணப்பட்ட உறவு மீண்டும் அதே நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என கனடா பிரதமர் மார்க் கார்னி முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் நீண்டகாலமாக நெருக்கமான வர்த்தக உறவுகளை கொண்டுள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தக மோதல் இரு நாடுகளின் பொருளாதார உறவுகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.