கனடாவில் இந்திய இளம்பெண் ஒருவர் சுட்டுக்கொலை: குற்றவாளி தலைமறைவு
கனடாவின் பெட்ரோல் நிலையம் ஒன்றில் பணியாற்றிவந்த இந்திய இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட விடயம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை இரவு, 10.40 மணியளவில், Mississauga நகரில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில், துப்பாக்கிச்சூடு நடந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பொலிசார் அங்கு விரைந்தபோது, இந்திய இளம்பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கிடந்துள்ளார். உடலில் பல இடங்களில் குண்டுபாய்ந்து அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில், அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல், அவர் உயிரிழந்துள்ளார்.
பஞ்சாபைச் சேர்ந்த அந்த பெண் கனடாவில் Bramptonஇல் வாழ்ந்துவந்துள்ளார். அவரது பெயர் Pawanpreet Kaur (21) என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Credit: Peel Regional Police/Twitter
Pawanpreet Kaurஐ சுட்டுக்கொன்ற நபர், அங்கிருந்து கால்நடையாகவே தப்பிச் சென்றுள்ளார். பொலிசார் அவர் குறித்து வெளியிட்டுள்ள தகவலில், அடர் வண்ண ஆடை அணிந்த ஆண் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட விரோதம் காரணமான தாக்குதலாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் யாருக்காவது ஏதாவது தகவல் தெரிந்தாலோ, தங்கள் வீடுகள் அல்லது காரில் உள்ள கமெரா எதிலாவது ஏதாவது காட்சிகள் பதிவாகியிருந்தாலோ, தங்களுக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.