மோசடி செய்து புலம்பெயர்தலுக்கு உதவுவோருக்கு கடும் அபராதம்: கனடா அரசின் புதிய விதிகள்
Canada has introduced new monetary penalties of up to CAD $1.5 million for fraudulent and unauthorized immigration and citizenship representatives: புலம்பெயர்தல் மோசடிகளுக்கு 1.5 மில்லியன் டொலர்கள் வரை அபராதம் விதிக்கும் வகையிலான விதிகளை கனடா அரசு அறிமுகம் செய்துள்ளது.
கனடா அரசாங்கம் தனது புலம்பெயர்தல் மற்றும் குடியுரிமை அமைப்புகளின் நேர்மையைப் பேணுவதற்கும், விண்ணப்பதாரர்களை மோசடி மற்றும் சுரண்டலிலிருந்து பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது.

அவ்வகையில், விண்ணப்பதாரர்களைச் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்க உதவும் வகையில், கட்டணம் பெற்றுக்கொண்டு புலம்பெயர்தல் அல்லது குடியுரிமை தொடர்பான ஆலோசனையோ அல்லது பிரதிநிதித்துவமோ வழங்கும் போது சட்டத்தை மீறுபவர்களுக்கு 1.5 மில்லியன் கனேடிய டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என கனடா அரசு அறிவித்துள்ளது.
முறைப்படி அங்கீகாரம் பெறாதவர்கள், கட்டணம் பெற்றுக்கொண்டு புலம்பெயர்தல் அல்லது குடியுரிமை தொடர்பான ஆலோசனை அல்லது பிரதிநிதித்துவம் வழங்கினால் அவர்களுக்கு 5,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும்.
ஒரு விண்ணப்பதாரரின் சார்பாகத் தெரிந்தே தவறான அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்களை வழங்கினால் அல்லது அவ்வாறு செய்ய விண்ணப்பதாரருக்கு உதவினால் 15,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும்.
தவறான அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்களின் அடிப்படையில் ஒரு விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், அத்தகைய விடயத்தில் தொடர்புடையவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படலாம்.
மீண்டும் மீண்டும் விதிமீறல்களில் ஈடுபடும்போது அபராதங்கள் அதிகரிக்கும், அனைத்து விதிமீறல்களையும் சேர்த்து அதிகபட்சமாக 1.5 மில்லியன் டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இந்த புதிய விதிகள் நேற்று முன் தினம், அதாவது, அக்டோபர் மாதம் 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளன.
அத்துடன், அபராதம் விதிக்கப்படும்போது, அபராதம் விதிக்கப்பட்டவர்களின் பெயர்களையும் அவர்களின் விதிமீறல்களின் விவரங்களையும் IRCC தனது இணையதளத்தில் வெளியிடும்.
இது நேர்மையற்ற பிரதிநிதிகள் குறித்து மக்களை எச்சரிப்பதன் மூலமும், வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதன் மூலமும் பொதுமக்களைப் பாதுகாக்க உதவும்.
ஆகவே, புலம்பெயர்தல் அல்லது குடியுரிமை தொடர்பான ஆலோசனையை நாடுபவர்கள், தங்களது பிரதிநிதிக்கு சேவைக் கட்டணம் செலுத்தும் முன், அவர் அங்கீகாரம் பெற்றவரா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.