போஸ்னியாவின் உலங்கு வானூர்தி விபத்து ; 4 படை வீரர்கள் உயிரிழப்பு
போஸ்னியாவின் வடக்குப் பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 4 படை வீரர்கள் உயிரிழந்ததுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாலியைச் சேர்ந்த CH-47 சினூக் உலங்கு வானூர்தி, பர்க்கோ நகரப் பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது.

காயமடைந்தவர்கள் தற்போது சீரான உடல்நிலையுடன் மருத்துவச் சிகிச்சை பெற்று வருவதாக ஐரோப்பிய ஒன்றியப் படை தெரிவித்துள்ளது.
இது குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலதிக தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியப் படை கூறியுள்ளது.
மேலும், "பொதுமக்களின் உள்கட்டமைப்புகள், சொத்துகள் அல்லது வாகனங்கள் எதுவும் சேதமடையவில்லை எனவும் பொதுமக்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை" என்றும் ஐரோப்பிய ஒன்றியப் படை மேலும் குறிப்பிட்டுள்ளது.