கிரீன்லாந்துக்கு அடுத்து கனடாவே அமெரிக்காவின் அடுத்த இலக்கு! கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது குறித்து வெளியிட்டுள்ள கருத்துகள், உலக நாடுகளுக்கு மட்டுமன்றி கனடாவிற்கும் பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிரீன்லாந்தில் பிறந்த பிரபல பழங்குடியின வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான ஆஜு பீட்டர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற முயன்றால், அதற்கு அடுத்ததாக கனடாவே அவரது இலக்காக மாறும் அபாயம் உள்ளது. இதை எந்த வகையிலும் நாம் அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் டிரம்பின் கிரீன்லாந்து தொடர்பான பேச்சுக்களை பொருட்ாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், ஆனால் தற்போது அமெரிக்க ஜனாதிபதி மேற்கொள்ளக்கூடிய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, இது உண்மையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும் ஆஜு பீட்டர் கூறினார்.
“கிரீன்லாந்தின் மக்களும், அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், அமெரிக்காவின் ஒரு பகுதியாக சேர விரும்பவில்லை என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர்.
அவர்களின் குரலை உலக நாடுகள் கேட்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார். கருத்துக்கணிப்புகளின்படி, கிரீன்லாந்தில் வாழும் 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் அமெரிக்காவுடன் இணைவதை விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிரீன்லாந்து டென்மார்க் அரசின் கீழ் உள்ள தன்னாட்சி பிரதேசமாக இருந்தாலும், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் டென்மார்க் பொறுப்பேற்கிறது. அதே நேரத்தில், கிரீன்லாந்து நேட்டோ (NATO) அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளது.
இந்நிலையில், பொருளாதார அல்லது இராணுவ அழுத்தம் மூலம் கிரீன்லாந்தை கட்டுப்படுத்தும் எந்த முயற்சியும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு எதிரானது என ஆஜு பீட்டர் தெரிவித்தார்.
இன்று கிரீன்லாந்து என்றால், நாளை கனடாவாக இருக்கலாம். அதனால், ஜனநாயக உலகம் முழுவதும் கிரீன்லாந்துக்கு ஆதரவாக ஒன்றிணைய வேண்டும் என அவர் கூறினார்.