புலம்பெயர்தல் தொடர்பில் கனடா அரசு எடுத்துள்ள மற்றொரு முடிவு
கனடா அரசு தொடர்ந்து புலம்பெயர்தல் தொடர்பில் பல நடவடிக்கைகளை எடுத்தவண்ணம் உள்ளது.
அவ்வகையில், புலம்பெயர்தல் திட்டம் ஒன்றை இடைநிறுத்தியுள்ளது கனடா.
அதாவது, கனடா அரசின், பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியருக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு ஸ்பான்சர் செய்யும் திட்டத்தை கனடா தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு, 20,500 பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியருக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு ஸ்பான்சர் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறும் இலக்குடன், விண்ணப்பம் செலுத்த 35,700 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, ஏற்கனவே 40,000 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்ததாக மார்க் மில்லர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆகவே, ஏற்கனவே விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்காகவே, தற்போது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியருக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு ஸ்பான்சர் செய்யும் திட்டத்தை கனடா நிறுத்தியுள்ளதாக மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, இத்தகைய விண்ணப்பங்களைப் பரிசீலிக்க, சராசரியாக 24 மாதங்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.