ஐரோப்பாவின் ஒத்துழைப்பை நாடும் கனடாவின் புதிய பிரதமர்
கனடாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மார்க் கார்னி, வெளிப்படையாகவே ஐரோப்பா பக்கம் சாய்வது தெரியவந்துள்ளது.
கனடா ஒரு வட அமெரிக்க நாடு என்பது பலரும் அதிகம் யோசிக்காத ஒரு விடயம். ஆனால், கனடாவுக்கு அதிகம் தொல்லை கொடுப்பதே அமெரிக்காதான்.
குறிப்பாக, கனடா மீது வரிகள் விதித்தும், கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டியும் தொல்லை கொடுத்துவருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
ஆகவே, கனடாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைக் கார்னி, ஐரோப்பாவின் ஒத்துழைப்பை நாடுகிறார். அதற்காக அவர் இன்று பாரீஸ் மற்றும் லண்டனுக்கு பயணிக்கிறார்.
கனடா உருவான ஆரம்ப காலத்தில், கனடாவை உருவமைக்க பிரான்சும் பிரித்தானியாவும் பேருதவி புரிந்தன என்பது வரலாறு.
ஆக, அமெரிக்கா இடையூறு செய்யும் நிலையில், வேண்டுமென்றே முதல் அரசுமுறைப்பயணமாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு செல்வதைத் தேர்ந்தெடுத்துள்ளதன் மூலம் ஐரோப்பா பக்கம் கனடா சய்வதை வெளிப்படையாக உலகுக்குத் தெரிவித்துள்ளார் கார்னி.
தான் கனடாவின் பிரதமராக பதவியேற்கும்போதே, கனடா மூன்று பிரிவு மக்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டதாக கார்னி தெரிவித்திருந்தார்.
கனடா, பிரெஞ்சு மக்கள், பிரித்தானிய மக்கள் மற்றும் பூர்வக்குடியினர் என்னும் மூன்று பிரிவு மக்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டதாக தெரிவித்த கார்னி, கனடா அடிப்படையிலேயே அமெரிக்காவிலிருந்து வித்தியாசமானது என்றும், எப்போதும், எந்த வகையிலும். கனடா அமெரிக்காவின் ஒரு பாகமாக ஆகாது என்றும் உறுதிபடத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.