ஐரோப்பிய நாடுகளுக்கு தபால் பொதிகளை அனுப்பும் கனடியர்களின் கவனத்திற்கு...
குறைந்த மதிப்புள்ள பொதிகளுக்கான புதிய சுங்க விதிமுறைகள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகளுக்கான தபால் மற்றும் பொதிகளுக்கான சேவைகளை கனடா தபால் திணைக்களம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
மறு அறிவித்தல் வரும் வரை, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 12 நாடுகளுக்கான தபால் பொதிகளை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என கனடா தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 150 யூரோக்கள் வரையிலான மதிப்புள்ள பொதிகளுக்கு 3 யூரோக்களை சுங்க வரியாக விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
சுங்க வரியைத் தவிர்ப்பதற்காகப் பல பொதிகளின் மதிப்பு குறைத்துக் காட்டப்படுவதாகவும் அல்லது தவறான தகவல்கள் பிரகடனப்படுத்தப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போதைய விதிமுறைகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உற்பத்தி செய்யும் அல்லது விற்கும் வணிகர்களை விட, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் உள்ள விற்பனையாளர்களுக்கு "நியாயமற்ற சாதகத்தை" வழங்குவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள இந்த 12 நாடுகளின் சந்தைகளில் புதிய விதிகளுக்கு இணங்கக்கூடிய தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகளுக்கான தபால் பொதிகள் சேவைகளை கனடா தபால் திணைக்களம் தொடர்ந்து வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.