வெனிசுலாவில் எரிபொருள் இல்லாததால் மீட்புப் பணிகள் முடக்கம்
வெனிசுலாவில் நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், கருவிகள் இல்லாமல் கைகளால் தோண்டி உறவினர்களை மக்கள் தேடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெனிசுலாவின் கடலோர நகரமான லா குவாய்ராவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களுக்கு ஒரு வாரம் நெருங்கியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் இன்னும் முழுமையாக முன்னேற முடியாமல் திணறி வருகின்றன.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் கையிருப்புகளில் ஒன்றைக் கொண்ட நாடாக இருந்தாலும், எரிபொருள் பற்றாக்குறையால் கனரக இயந்திரங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டிருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகழ்வுப் பணிக்கான எக்ஸ்கவேட்டர் இயந்திரம் ஏன் இயங்கவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கான ஓட்டுநர், "இயந்திரத்தில் நிரப்புவதற்கு பெட்ரோல் இல்லை" என்று பதிலளித்தார்.
இதனால், இடிபாடுகளில் சிக்கியிருக்கும் தங்களது உறவினர்களை மீட்க பொதுமக்கள் மண்வெட்டி, கடப்பாரை மற்றும் வெறும் கைகளைக் கொண்டு இடிபாடுகளை அகற்றும் அவல நிலை உருவாகியுள்ளது.
அரசின் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. நிலநடுக்கத்திற்குப் பிறகு மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த நான்கு அரசு அதிகாரிகள், இடிபாடுகளில் இருந்து கிடைத்த நகைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெனிசுலாவின் குற்றப்புலனாய்வு அமைப்பு (CICPC) வெளியிட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அவசரநிலையைப் பயன்படுத்தி ஊழல் செய்வதையோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையையும் அரசு ஒருபோதும் அனுமதிக்காது" என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் நாடுகடத்தப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தற்போதைய பேரிடர் சூழ்நிலை காரணமாக வெனிசுலாவுக்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் மக்களுடன் இணைந்து இருக்க வேண்டியது அவசியம். நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட குழப்பங்கள் இருந்தபோதிலும், தற்போது மீட்புப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் தன்னார்வலர்களை பிரித்து மேற்கொள்ளப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.