தமிழர்களின் நினைவுரிமையை அங்கீகரித்த கனடா, உலக நாடுகளுக்கும் கோரிக்கை ; அனைத்துலக தமிழர் பேரவை
தமிழர்களின் நினைவுரிமையை கனடா அங்கீகரித்தமை போன்று உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் என அனைத்துலக தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அவ் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது நினைவேந்தல் உரிமை என்பது உலகம் முழுவதும் உள்ள மக்களின் அடிப்படை உரிமையாகும்.
நினைவேந்தல் உரிமை
போர்கள் நடந்த நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் மேம்பாட்டிற்காக நினைவேந்தல் உரிமை உதவுகிறது. மோதல்கள் நடந்த நாடுகளில் நிலைமாறுகால நீதியாக கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறதலுக்கான வழிமுறையாக நினைவேந்தல் முக்கிய வழிமுறையாகிறது இலங்கையில் மரபுகளையும் ஞாபகங்களையும் நினைவுகளையும் அழிப்பதை ஒரு இனழிவப்பாக ஸ்ரீலங்கா அரசு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கையாண்டு வருகிறது.
1981 இல் யாழ் நூலக எரிப்பு தமிழர்களின் அறிவுடமையை அழிப்பதுடன் அவர்களின் அடையாளத்தையும் அழிக்கும் விதமாக நிகழ்த்தப்பட்டது. போரில் ஆலயங்கள், மரபுரிமை மையங்கள் என தொன்மைச் சான்றுகளை இலங்கை அரசு அழித்து வந்துள்ளது.
போரின் நினைவிடங்களாக அமைந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் போரின் சாட்சியாகவும் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் நினைவுச் சேகரப்பு இடங்களாகவும் இருக்கின்றன.
மாவீர்ர் துயிலும் இல்லங்களும் உளவியல் ஆற்றுப்படுத்தலைச் செய்கின்ற நினைவிட உரிமையின் முக்கிய மையங்கள் ஆகும். போரின் இறுதியில் இலங்கை அரசு மாவீரர் துயிலும் இல்லங்களை திட்டமிட்டு புல்டொசர் கொண்டு அழித்தது.
இது எங்கள் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் மனத்தாக்கங்களை உருவாக்கியது. அதனால்தான் போரில் வென்ற அரசினால் தமிழ் மக்களை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 2021ஆம் ஆண்டு, யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபியை இலங்கை அரசு இரவோடு இரவாக அழித்த நிகழ்வு உலகத் தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமின்றி பன்னாட்டுச் சமூகத்திலும் பெரும் அதிர்வை உருவாக்கியது.
அப்போதுதான் கனடாவில் ஒரு நினைவுச் சின்னத்தை அமைக்கவும் எண்ணமும் தோற்றம் பெற்றது. இன்று கனடா ஒரு நினைவுத் தூபியை அமைத்து இந்த உலகில் முன்னுதாரணமாக செயற்பாட்டைப் புரிந்துள்ளது. இதன் வழியாக உலகின் நீதி முகமாக கனடா இருக்கின்றது. ஈழத் தமிழ் மக்களுடன் கனடா துணையிருப்பது மிக முக்கியமான பணி எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.