அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான டிஜிட்டல் வரியை கனடா ரத்து
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்கு வைத்து விதிக்கப்பட்டிருந்த டிஜிட்டல் சேவைகள் வரி (DST)யை கனடா அரசு ரத்து செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, அமெரிக்காவுடன் நடைபெறும் புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு உதவியாக இருக்குமெனவும், கனடியர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வளத்தை உருவாக்கும் முயற்சிக்கு இது ஆதரவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய நிதி அமைச்சு
வரியைத் திரும்பப் பெறுவது, முக்கிய முன்னேற்றங்களை ஏற்படுத்தும் மற்றும் எல்லா கனடியர்களுக்கும் நலனளிக்கின்ற வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என கனடிய நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முடிவானது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை கனடாவுடன் உள்ள வர்த்தக பேச்சுவார்த்தைகளை திடீரென நிறுத்தியதையடுத்து வெளியானது.
அவர், இந்த வரி ஒரு "தெளிவான தாக்குதலாக" இருப்பதாக விமர்சித்து, ஒரு வாரத்திற்குள் கனடாவிற்கான புதிய சுங்க வரி(tariff) விகிதத்தை அறிவிப்பதாக எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வர்த்தக ஒப்பந்தத்தை 2025 ஜூலை 21க்குள் இறுதியாக்கும் நோக்கி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவுள்ளனர் என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.