பரிதாப நிலையில் கனடாவின் சுகாதாரத்துறை: முகத்தில் அறைந்த ஆய்வறிக்கை
அதிக வருவாய் கொண்ட 11 நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட சுகாதாரத்துறை தொடர்பான ஆய்வில் கனடா 10வது இடத்தில் உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சுகாதாரத்துறையின் ஒட்டுமொத்த செயற்பாட்டில் நோர்வே முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து நெதர்லாந்தும் அவுஸ்திரேலியாவும் இடம் பெற்றுள்ளது.
ஆனால் சுவிட்சர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த 11 நாடுகளின் பட்டியலில் கனடா 10வது இடத்திலும் அமெரிக்கா கடைசி இடத்திலும் உள்ளது.
அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகளில் சுகாதாரப் பராமரிப்பை அணுகுவதில் வருமானம் தொடர்பான ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகம் என்று அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
மட்டுமின்றி, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்கா மற்றும் கனடாவில் வருமானம் தொடர்பான ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக நோயாளிகளே வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், குழந்தை பருவ கல்வி, பெற்றோர் விடுப்பு மற்றும் ஒற்றை பெற்றோருக்கான வருமான ஆதரவு போன்ற சமூக திட்டங்களுக்கு கனடா குறைவாக செலவழிப்பதாக அறிக்கை கண்டறிந்துள்ளது, இது சுகாதாரப் பாதுகாப்பு சேவைகளை பாதிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.