கனடாவில் 50 வயது நபருக்கு கல்வி அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் விடயத்தால் எழுந்துள்ள சர்ச்சை
Visitor விசாவில் கனடா வந்த 50 வயது நபர் ஒருவருக்கு கல்வி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறும் வீடியோ ஒன்று கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்திய வம்சாவளியினர் ஒருவர், தான் கனடாவுக்கு Visitor விசாவில் வந்ததாகவும், பின்னர் தனக்கு கல்வி அனுமதி கிடைத்ததாகவும் கூறும் வீடியோ ஒன்று சமூக ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், ‘என் பெயர் பிரதீக் பாய் காத்வா’ (Prateek Bhai Gadhva) என தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் அந்த நபர், தான் Visitor விசாவில் கனடாவுக்கு வந்ததாகவும், பின்னர் தனக்கு கல்வி அனுமதி கிடைக்க GOAT Consulting Inc என்னும் நிறுவனம் உதவியதாகவும் கூறுகிறார்.
இப்படி சுமார் 50 வயதுள்ள ஒருவருக்கு கல்வி விசா அளித்ததாக கூறப்படுவதைத் தொடர்ந்து கடுங்கோபமடைந்த சமூக ஊடக பயனாளர்கள் பலர், கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின்மீது முறைப்படி விசாரணை நடத்தவேண்டும் என கோரியுள்ளனர்.
தகுதியுடைய இளைஞர்கள் பலருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க மறுக்கும் புலம்பெயர்தல் அமைப்பு, 50 வயதுள்ள ஒருவருக்கு கல்வி விசா வழங்கியது எப்படி என சிலர் கொந்தளித்துள்ளனர்.
சிலரோ Visitor விசாவில் வந்தவருக்கு கல்வி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பியுள்ளனர். ஆக மொத்தத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார் பிரதீக் பாய் காத்வா. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!