உக்ரைனுக்கு கனடா 2.5 பில்லியன் டொலர் நிதி உதவி வழங்குகிறது
ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு, கனடா அரசாங்கம் கூடுதல் நிதி உதவியாக 2.5 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை கனடா பிரதமர் மார்க் கார்னி, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியுடன் இணைந்து வெளியிட்டார்.
இந்த நிதி உதவி, உக்ரைனின் பொருளாதாரத்தை நிலைநாட்டுவதற்கும், போர் காரணமாக சேதமடைந்த கட்டமைப்புகளை மீளமைப்பதற்கும் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி ஆதரவு
குறிப்பாக, சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து கூடுதல் நிதி ஆதரவைப் பெறுவதற்கு இந்த உதவி வழிவகுக்கும் என கனடா அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் உக்ரைனுக்கு சுமார் 10 பில்லியன் டொலர் வரை மறுசீரமைப்பு நிதி கிடைக்க வாய்ப்பு உருவாகும்.
மேலும், உக்ரைனின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஐரோப்பிய வங்கியிடமிருந்து பெறப்படவுள்ள 322 மில்லியன் டொலர் கடனுக்கு உத்தரவாதமாகவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள அண்மைய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை கடுமையாக கண்டித்த கனடா பிரதமர், “இந்த கடினமான காலகட்டத்தில் உக்ரைனுடன் கனடா உறுதியாக நிற்கும்” என கூறினார்.
இதற்கு பதிலளித்த உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி, கனடாவின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, இந்த நிதி உதவி உக்ரைன் மக்களின் மீட்சி மற்றும் மறுசீரமைப்புக்கு பெரும் வலுவாக அமையும் என தெரிவித்துள்ளார்.