அமெரிக்காவுடன் வர்த்தக போரை ஆரம்பித்த கனடா
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது 25 வீத வரி விதிப்பை அறிவித்த காரணமாக கனடாவும் அமெரிக்கா மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் ஆரம்பமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் முதல் கனடாவின் ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா 25 வீத வரியை விதித்துள்ளது.
இந்த வரி விதிப்பிற்கு பதிலடி வழங்கும் வகையில் கனடிய அரசாங்கமும் அமெரிக்க ஏற்றுமதி பொருட்களுக்கு 25 வீத வரியை விதிப்பதாக அறிவித்துள்ளது.
இதன்படி அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 155 பில்லியன் டாலர் பெறுமதியான பொருட்களுக்கு வரி விதிக்கப்பட உள்ளது. இந்த வரி விதிப்பு தொடர்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஊடகங்களிடம் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு பதிலடி வழங்கும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமெரிக்காவின் 30 பில்லியன் பெறுமதியான ஏற்றுமதிகள் மீது வரி விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சுமார் 125 பில்லியன் டாலர் பெறுமதியான ஏற்றுமதிகளுக்கு எதிர்வரும் 21 நாட்களில் வரி விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் கனடிய பண்டங்களை கொள்வனவு செய்யுமாறும் பிரதமர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடா மீது விதிக்கப்பட்ட வரி காரணமாக பல்வேறு தரப்பினர் தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிடும் எனவும் இது உணவு மற்றும் மளிகை பொருட்களின் விலைகளையும் எரிபொருட்களின் விலைகளையும் பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் மீது அதிக சுமையை திணிக்காதிருப்பதற்கான முனைப்புகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் ட்ரூடோ அறிவித்துள்ளார்.