ட்ரம்பின் வலைக்குள் சிக்கியது கனடா ; வர்த்தகப் போரை ஆரம்பிக்கும் அமெரிக்கா
வர்த்தகப் போரை விரிவுபடுத்தும் விதமாக, அமெரிக்காவில் விற்கப்படும் விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிப்போம் என கனடாவை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
உலக நாடுகள் தனது பேச்சை கேட்கவில்லை என்றால் வரி விதிப்பேன் என ஜனாதிபதி ட்ரம்ப் அச்சுறுத்தி வருகிறார்.

தாறுமாறாக வரி
பின்னரும் தனது உத்தரவுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் தாறுமாறாக வரி விதிப்பு ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு வெளியிடுவது வழக்கமாகி விட்டது.
அந்தவகையில் ட்ரம்பின் பார்வை இன்று கனடா மீது சென்றுவிட்டது. வர்த்தகப் போரை விரிவுபடுத்தும் விதமாக, கனடாவில் தயாரிக்கும் விமானங்களுக்கு வரி விதிப்பேன் என அதிபர் டிரம்ப் அச்சுறுத்தி உள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இதுவரை உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த, தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட விமானங்களில் ஒன்றான கல்ப்ஸ்ட்ரீம் 500, 600, 700 மற்றும் 800 ஜெட் விமானங்களுக்கு கனடா தவறான முறையில், சட்டவிரோதமாக, பிடிவாதமாக சான்றிதழ் வழங்க மறுத்து வருகிறது.
ஒரு சிறந்த அமெரிக்க நிறுவனமான கல்ப்ஸ்ட்ரீமிற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்டிருக்க வேண்டிய சான்றிதழ் வழங்கப்படும் வரை, நாங்கள் கனடாவின் பாம்ப்பார்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கும், கனடாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து விமானங்களுக்கும் வழங்கும் சான்றிதழை ரத்து செய்கிறோம்.
இந்தச் சான்றிதழ் வழங்கும் செயல்முறையின் மூலமாகவே கனடா, கல்ப்ஸ்ட்ரீம் தயாரிப்புகளின் விற்பனையை கனடாவில் தடை செய்கிறது. இந்த நிலைமை உடனடியாகச் சரிசெய்யப்படாவிட்டால், அமெரிக்காவிற்கு விற்கப்படும் அனைத்து விமானங்களுக்கும் கனடா மீது நான் 50% வரியை விதிக்கப் போகிறேன் என கூறியுள்ளார்.