ஆறு ஆண்டுகளின் பின் அமெரிக்கா - வெனிசுலா விமான போக்குவரத்து!
சுமார் ஆறு ஆண்டுகளின் பின் அமெரிக்கா - வெனிசுலா நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (American Airlines) நிறுவனம் வியாழக்கிழமை (ஜன 29 ) அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்கப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் ஷான் டஃபி, 2019 முதல் நடைமுறையில் இருந்த விமானத் தடையை உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ளார்.

அமெரிக்க குடிகள் மிக விரைவில் வெனிசுவேலாவுக்கு
வெனிசுவேலலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸுடன் (Delcy Rodríguez) நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
"அமெரிக்க குடிமக்கள் மிக விரைவில் வெனிசுவேலாவுக்குச் செல்ல முடியும், அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்" என அவர் உறுதியளித்துள்ளார்.
1987 முதல் வெனிசுவேலாவில் இயங்கி வந்த இந்த நிறுவனம், அரசு ஒப்புதல்கள் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்குப் பின்னர் தினசரி விமான சேவைகளை ஆரம்பிக்கும்.
இது வணிகம், சுற்றுலா மற்றும் மனிதாபிமானப் பயணங்களுக்கு உதவும். இந்த மாத தொடக்கத்தில் (ஜன 03), அமெரிக்க இராணுவம் நடத்திய 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' (Operation Absolute Resolve) என்ற அதிரடித் தாக்குதலில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து வெனிசுவேலாவின் அரசியல் சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் உடனடியாகத் தொடங்காது.
எஃப்.ஏ.ஏ (FAA) மற்றும் டி.எஸ்.ஏ (TSA) ஆகிய அமைப்புகள் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே விமானங்கள் இயக்கப்படும். இதற்கு சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம்.
மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளின் வான்பரப்பில் பறக்க விதிக்கப்பட்டிருந்த எச்சரிக்கைகளையும் அமெரிக்கா தற்போது விலக்கியுள்ளது.
அதேவேளை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தனது திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், யுனைடெட் ஏர்லைன்ஸ் இது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.