1970-க்கு பின் அவசரநிலை சட்டத்தை அமல்படுத்திய கனடா!
கனடாவில் பொதுமக்கள் போராட்டத்துக்கு எதிராக 1970-ம் ஆண்டுக்குபின் அவசரநிலை சட்டத்தை அந்நாடு அரசாங்கம் அமல்படுத்தியது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. லொறி சாரதிகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம். கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசாங்கம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லொறி சாரதிகள், கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒட்டாவா பாலத்தைப் போராட்டக்காரர்கள் முடக்கியதால் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. பொலிஸார் துணையுடன் பாலம் திறக்கப்பட்டு போக்குவரத்து நடைபெறுகிறது.
இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அறிவித்தார். 1970-ம் ஆண்டுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சட்டவிரோத மற்றும் ஆபத்தான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டார்.
இந்த நிலையில், கனடா நாடாளுமன்றம் அருகில் முற்றுகையிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். நண்பகலில் குறைந்தது 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சுமார் 2 டஜன் வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன. இந்த தடியடியில் ஒரு அதிகாரிக்கு சிறிய காயம் ஏற்பட்டது என ஒட்டாவா போலீசார் தெரிவித்தனர்.