கனடியர்களுக்கான பயண எச்சரிக்கை:
அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கும் கனடியர்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் அமெரிக்க அரசுடன் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என கனடாவின் புதிய பயண அறிவுறுத்தல் தெரிவிக்கிறது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (U.S. Citizenship and Immigration Services) இணையதளத்தில் பதிவு தேவையா என்பதையும், எப்படி செய்வது என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்ய தவறினால்அபராதம் மற்றும் தண்டனை விதிக்கலாம் எனவும் குற்றவியல் வழக்கு தொடுக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயணிகள் அமெரிக்காவில் நுழையும் போது தானாகவே பதிவு செய்யப்பட்டுள்ளனரா என்பதைக் கண்காணிக்க I-94 அனுமதி படிவத்தை (U.S. Customs Border Protection இணையதளத்தில்) சரிபார்க்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கனடாவுக்கு வர்த்தக வரிகள் விதிப்பதையும், அதனை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றுவதையும் தொடர்ந்து கூறி வருவதால், பல கனடியர்கள் பயணத்திட்டங்களை மாற்றியுள்ளனர்.
அண்மையில், வான்கூவர் நகரைச் சேர்ந்த ஒரு கனடிய பெண் மெக்ஸிகோ-அமெரிக்க எல்லையில் தொழில் வீசா மறுக்கப்பட்டதால் அமெரிக்க அதிகாரிகளால் ஒரு வாரத்திற்கும் மேலாக கைது செய்யப்பட்டிருந்தார்.
கனடியர்களின் அமெரிக்க பயண நிபந்தனைகள் மேலும் கடுமையாகும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, சீனாவுக்கு பயணிக்க உள்ள இரட்டை குடியுரிமை கொண்ட கனடியர்கள், சீன அதிகாரிகளிடம் தங்கள் கனடிய ஆவணங்களை மட்டுமே வழங்க வேண்டும் என கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, கடந்த சில மாதங்களில் சீன அரசு நான்கு கனடியர்களுக்கு மரண தண்டனை செயல்படுத்தியிருப்பதாக அறிவித்தார்.
சீனாவில் இருக்கும் கனடியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், கனடிய தூதரக உதவிகளை பெற முடியாமல் போகலாம் எனவும் அறிவித்துள்ளது.
சீன நீதித்துறையின் குறைந்த வெளிப்படைத்தன்மை காரணமாக சட்ட உதவிகளை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை பெற்ற நான்கு கனடியர்களும் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் எனவும், அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சீன அரசு கூறுவதாகவும் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கனடா மரண தண்டனையை கண்டிக்கின்றது. "இது திருப்பிக்கொள்ள முடியாதது மற்றும் மனித அடிப்படை மரியாதைக்கு எதிரானது" என்று அரசு தெரிவித்துள்ளது.