தடுப்பூசி போட தாமதிக்கும் கனேடியர்கள்: நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை
கனடாவில் தடுப்பூசியின் டிமாண்ட் குறைந்துவருவதாக தெரிவிக்கும் நிபுணர்கள், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்குமா என்று பார்த்துவிட்டு பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சிலர் காத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
அப்படி தாமதிப்பது நேரத்தை விரயம் செய்வதாகும் என்று எச்சரிக்கிறார்கள் அவர்கள். எவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் உடல் ஆன்டிபாடிகளை உருவாக்கத் தொடங்கும், நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தாமதிப்பதால் உடலில் ஆன்டிபாடிகள் உருவாகும் நேரம் வீணாகும், அதாவது நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் நேரம் வீணாகும் என்கிறார்கள் அவர்கள்.
கடந்த வாரத்தைப் பார்க்கும்போது, நாளொன்றிற்கு ஒரு சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளார்கள். ஜூன் இறுதியில் நாளொன்றிற்கு 1.44 என்ற மிக உயர்ந்த எண்ணிக்கையிலிருந்து இப்போது அந்த எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.
அதேபோல், முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு முன் 96,000 ஆக இருந்தது, தற்போது 40,000க்கும் குறைந்துவிட்டது.
80 சதவிகித மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியும், கிட்டத்தட்ட 60 சதவிகிதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் பெற்றுக்கொண்டுள்ளதால், தடுப்பூசி பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், வாட்டர்லூ பல்கலைகழக மருந்தகத் துறை பேராசிரியரான Kelly Grindrod, தடுப்பூசி பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை குறைவது கவலைக்குரிய விடயம் என்கிறார்.
ஏற்கனவே புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், எதிர்காலத்தில் புதிதாக கொரோனா பரவல் உருவாகாமல் தடுக்கவேண்டுமானால் அதிக கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டாகவேண்டும் என்கிறார்.
அதிக அளவில் தடுப்பூசி வழங்கும் பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து நாடுகளில்கூட புதிது புதிதாக கொரோனா அலைகள் உருவாகும் நிலையில், அவை தடுப்பூசி பெறாதவர்களையே பெரிதும் தாக்குவதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தாங்கள் அபாயத்திலிருக்கிறோம் என்பதை மக்கள் அறிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று கூறும் Kelly, மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை உயரும் வரை காத்திருப்போம் என்று நீங்கள் நினைப்பீர்களானால், பிறகு மிகவும் தாமதாகிவிடும் என எச்சரிக்கிறார்.