கனடாவில் வேலையின்மை குறித்து வெளியான தகவல்
கனடாவின் வேலையின்மை விகிதம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 6.9 சதவீதமாக உயர்ந்து, கடந்த ஆறு மாதங்களில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளதாக கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்புகள், வர்த்தக நிச்சயமற்ற தன்மை மற்றும் சர்வதேச அரசியல் சூழல்களுக்கு மத்தியில் கனேடிய வேலைவாய்ப்பு சந்தை கடும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.
ஏப்ரல் மாதத்தில் 15,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என ஆய்வாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மாறாக 17,700 வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, முழுநேர வேலைவாய்ப்புத் துறையில் 46,700 பணியிடங்கள் பறிபோயுள்ளன.
இது பகுதிநேர வேலைவாய்ப்புகளில் ஏற்பட்ட 29,000 அதிகரிப்பால் ஓரளவுக்கு ஈடுசெய்யப்பட்டாலும், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு சந்தையில் பலவீனம் தொடர்வதையே இது காட்டுகிறது.
பொருட்களை உற்பத்தி செய்யும் துறையில் ஏற்பட்ட 26,800 வேலை இழப்புகள், அமெரிக்க வர்த்தகக் கட்டுப்பாடுகளின் தாக்கத்தைப் பிரதிபலிக்கின்றன.
அதேவேளை, வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 'பங்கேற்பு விகிதம்' 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய வயதுடையவர்கள் மற்றும் இளைஞர்களிடையேயான வேலையின்மை விகிதமும் முறையே 6 சதவீதம் மற்றும் 14.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.