போலியான கப்பல் சான்றிதழ்கள் ; இந்திய தம்பதிகளுக்கு அமெரிக்கா தடை!
ஈரானிய கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு போலியான கப்பல் சான்றிதழ்கள் மற்றும் கொடிகளை வழங்கி உதவியதாக இந்தியாவில் உள்ள ஒரு தம்பதி மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
ஈரானிய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
அமெரிக்க நிதித்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவை சேர்ந்த சுனில் குமார் சர்மா மற்றும் அவரது மனைவி ஜஸ்ப்ரீத் பிரீதி ஷாஹித் ஆகியோர் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் போலியான இணையதளங்களை உருவாக்கி, பல்வேறு நாடுகளின் பெயரில் போலி கப்பல் பதிவுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, ஈரானிய எண்ணெயை சுமந்து செல்லும் கப்பல்கள் சர்வதேச கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிக்க உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்களுடன் தொடர்புடைய ஓஷனிக் டெக்னாலஜிஸ் இந்தியா, ஆர்யாவார்ட் ஷிப் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பல இந்திய நிறுவனங்களும் இந்த தடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும், ஈரானிய விமான நிறுவனங்களுக்குச் சேவைகளை வழங்கிய துருக்கியை சேர்ந்த 'ஃபுகோ கிரவுண்ட் சர்வீசஸ்' என்ற நிறுவனத்தின் மீதும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.
ஈரானின் பொருளாதார வழிகளை முடக்கும் 'ஆப்பரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் தடையிலிருக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களின் அமெரிக்க அதிகார வரம்பிற்குட்பட்ட சொத்துக்கள் முடக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.