அமெரிக்க செனட் வரலாற்றில் முதல் முஸ்லிம் உறுப்பினர் ; அப்துல் எல்-சயீத் புதிய சாதனை
அமெரிக்க அரசியல் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளார் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அப்துல் எல்-சயீத் (Abdul El-Sayed). மிச்சிகன் மாநிலத்திலிருந்து அமெரிக்க செனட் சபைக்குத் தெரிவானதன் மூலம், அமெரிக்க வரலாற்றில் செனட் உறுப்பினராகத் தெரிவான முதல் முஸ்லிம் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில், மிச்சிகன் மாநில செனட் ஆசனத்திற்காக ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட 42 வயதான அப்துல் எல்-சயீத், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மைக் ரோஜர்ஸை (Mike Rogers) தோற்கடித்துள்ளார்.
கடும் போட்டிக்கு மத்தியில் இந்த வெற்றியைப் பெற்றுள்ள அவர், இதன் மூலம் அமெரிக்க செனட் சபையில் புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்.

இந்தத் தேர்தல் வெற்றி ஜனநாயகக் கட்சியின் முற்போக்கு அணிக்கும் முக்கிய அரசியல் வெற்றியாகக் கருதப்படுகிறது.
எகிப்திலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த பெற்றோரின் மகனான அப்துல் எல்-சயீத், பொதுச் சுகாதாரத்துறை நிபுணராகவும் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.
குறிப்பாக, வெய்ன் கவுண்டி மற்றும் டெட்ராய்ட் நகரின் பொதுச் சுகாதார நிர்வாகப் பொறுப்புகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.
இதற்கு முன்னர் எந்தவொரு தேர்தல் மூலமும் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பதவியை அவர் வகித்திருக்கவில்லை.
2018ஆம் ஆண்டு மிச்சிகன் மாநில ஆளுநர் தேர்தலில் போட்டியிட்ட போதிலும், ஜனநாயகக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை.
இம்முறை தேர்தலில் அனைவருக்கும் சுகாதாரச் சேவைகளை உறுதிப்படுத்துதல், மருத்துவச் செலவுகளைக் குறைத்தல், அரசியலில் பெருநிறுவனங்களின் நிதி ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தேர்தல் செயற்பாடுகளில் வெளிநிதிகளின் செல்வாக்கைக் குறைத்தல் உள்ளிட்ட கொள்கைகளை அவர் முன்னிறுத்தியிருந்தார்.
அத்துடன், இஸ்ரேலின் கொள்கைகள் மற்றும் காஸா மீதான அதன் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் (Alexandria Ocasio-Cortez) உள்ளிட்ட அமெரிக்காவின் முற்போக்கு அரசியல் தலைவர்களின் ஆதரவும் அவருக்குக் கிடைத்திருந்தது.

அப்துல் எல்-சயீதின் வெற்றி, அமெரிக்க ஜனநாயகக் கட்சிக்குள் நிலவும் முற்போக்கு அரசியல் அணியின் செல்வாக்கு மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பான விவாதங்களுக்கும் புதிய முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனநாயகக் கட்சியின் அரசியல் அணுகுமுறைகள் குறித்த விவாதங்களில் அவரது வெற்றி முக்கிய இடம்பிடிக்கும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
இதன்மூலம், அமெரிக்காவின் உயரிய சட்டவாக்க அமைப்பான செனட் சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கான புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது.
அப்துல் எல்-சயீத் 2027ஆம் ஆண்டு ஜனவரியில் செனட் உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார்.