ஆபத்தான சமூக வலைதள சவால்: கனடாவில் தொடரும் அதிர்ச்சி!
மேற்கு கியூபெக்கின் கேன்ட்லி பகுதியில் சமீபத்தில் நடந்த ஒரு ஆபத்தான சம்பவத்தின் பின்னணியில், டிக்டாக்கில் பிரபலமாகப் பேசப்படும் “லக் நட் சேலஞ்ச்” என்ற ஆபத்தான சமூக வலைதளப் போக்கே காரணமாக இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 29ம் திகதி, 'மொண்டே டி லா சோர்ஸ்' சாலையில் கார் ஓட்டிச் சென்ற ஒரு பெண், தனது காரின் சக்கரங்களில் இருந்து வழக்கத்திற்கு மாறான அதிர்வை உணர்ந்துள்ளார்.
உடனடியாகச் சாலையோரமாகக் காரை நிறுத்தி பரிசோதித்த போது, அவரது நான்கு சக்கரங்களில் மூன்று சக்கரங்களின் 'லக் நட்கள்' டயரைப் பிடித்து வைத்திருக்கும் மறைப்புகள் தளர்த்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தால் எவ்வித விபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை. காரின் நட்டுகள் முந்தைய நாள் இரவே யாரோ ஒருவரால் தளர்த்தப்பட்டிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
'லக் நட் சேலஞ்ச்' என்பது டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு ஆபத்தான ட்ரெண்ட் ஆகும். இதில் பங்கேற்பவர்கள், நிறுத்தப்பட்டிருக்கும் கார்களின் டயர் நட்டுகளை யாருக்கும் தெரியாமல் தளர்த்தி அல்லது கழற்றி விட்டு, அதை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றுவதாகக் கூறப்படுகிறது.
டிக்டாக் தளத்தில் “lug nut challenge” எனத் தேடினால், "சில ஆன்லைன் சவால்கள் ஆபத்தானவையாக, இடையூறு விளைவிப்பவையாக அல்லது போலியாக உருவாக்கப்பட்டு இருக்கலாம்" என்ற எச்சரிக்கைச் செய்தி தென்படுகின்றது.
வாகனங்களை இப்படிச் சேதப்படுத்துவது கடுமையான குற்றவியல் நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நீண்டகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கியூபெக் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கடந்த கோடை காலத்தில் கியூபெக்கின் ஈஸ்டர்ன் டவுன்ஷிப் பகுதியில் குறுகிய காலத்தில் இதுபோன்ற 5 சம்பவங்கள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.