சிறுமியிடம் மோசமாக நடந்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
கனடாவின் வான்கூவர் நகரில், தான் பராமரிக்க வேண்டிய பொறுப்பிலிருந்த 11-12 வயது சிறுமியை மாதக்கணக்கில் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெர்டினாண்ட் சிலாபே தாலினெஸ் என்பவருக்கு இவ்வாறு தண்டைனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தன் குடும்பத்தைக் காப்பாற்ற இரண்டு அல்லது மூன்று வேலைகளைச் செய்து வந்தார். அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது இரு மகள்களையும் பராமரிக்கும் பொறுப்பை தாலினெஸை நம்பி ஒப்படைத்திருந்தார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, சிறுமி மற்றும் அவரது தங்கை தூங்கும் படுக்கை அறைக்குள் நுழைந்து, 20 முதல் 25 முறை பாலியல் வன்கொடுமைகளை இழைத்துள்ளார்.

இந்தக் கொடூரம் ஜூன் 2021 முதல் அக்டோபர் 2022 வரை சுமார் நான்கு மாத கால இடைவெளியில் நடந்துள்ளது. அந்த 11-12 வயது சிறுமி இந்த பாலியல் அத்துமீறல்களின் போது அடைந்த பயமும் வேதனையும் விவரிக்க முடியாதது. ஒரு சிறுமியிடம் எந்தவித பாதுகாப்பும் இன்றி நடத்தப்பட்ட இந்த கோரமான நடவடிக்கை கடுமையான குற்ற உணர்வுக்குரியது என நீதிபதி கிரிகோரி எம். ரைடவுட் தெரிவித்துள்ளார்.
உடற்காயம் ஏற்படுத்திய பாலியல் தாக்குதல் குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பாலியல் அத்துமீறல் குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இவை இரண்டையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால், அவர் மொத்தம் 7 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டில் சமூகப் பணியாளர் ஒருவரிடம் அச்சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
மருத்துவப் பரிசோதனையிலும் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது. குற்றவாளிக்கு ஏற்கனவே குற்றப்பின்னணி எதுவும் இல்லை என்றாலும், அவர் மீண்டும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது என நீதிபதி குறிப்பிட்டார்.
தண்டனை காலத்திற்குப் பிறகு, தாலினெஸ் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு நாடு கடத்தப்பட அதிக வாய்ப்புள்ளது என்றும், அவர் மீண்டும் கனடாவிற்குள் நுழையத் தடை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே சிறையில் கழித்த 293 நாட்கள் அவரது தண்டனை காலத்தில் கழித்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.