கனடாவில் பொது இடங்களில் நிர்வாணமாக இருக்க அனுமதி கோரி மனு
கனடாவில் பொது இடங்களில் நிர்வாணமாக இருக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனடாவில் பொது இடங்களில் பாலியல் நோக்கமின்றி ஆடைகளின்றி இருப்பதற்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கக் கோரும் மனு ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக, கனடா பசுமைக் கட்சியின் தலைவர் எலிசபெத் மே இந்த மனுவுக்கு ஆதரவளித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஸ்பான்சர் செய்துள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஜிப்சன்ஸ் பகுதியைச் சேர்ந்த ஸ்காட் பிளீக்லி என்பவரால் இந்த மனு தொடங்கப்பட்டுள்ளது. கனடியர்களில் கணிசமானோர் ஆடைகளின்றி இயற்கை சூழலை அனுபவிப்பதை விரும்புகிறார்கள்.

எனவே, ஆபாசமான அல்லது சட்டவிரோதமான நடத்தைகள் இல்லாத பட்சத்தில் பொது இடங்களில் ஆடைகளின்றி இருக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
பொது இடங்களில் ஆடைகளின்றி இருப்பதைத் தடை செய்யும் தற்போதைய குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், "ஆடையின்றி இருப்பது மட்டுமே ஆபாசமான செயல் ஆகாது எனச் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டிலும் எலிசபெத் மே இதேபோன்ற ஒரு மனுவுக்கு ஆதரவளித்திருந்தார்.
எனினும், அவர் இந்த கோரிக்கையை தனிப்பட்ட முறையில் ஆதரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மக்களின் கோரிக்கைகளை அரசுக்குக் கொண்டு சேர்ப்பதும், அவற்றுக்கு அரசு பதிலளிப்பதை உறுதி செய்வதும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கடமையாகும். மனுவை தாக்கல் செய்வதால் மனுதாரரின் கருத்துக்களை எம்பி முழுமையாக ஏற்கிறார் என்று அர்த்தமல்ல என பசுமைக் கட்சியின் செய்தி தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.
கனடா நாடாளுமன்றத்தில் ஒரு மனு பரிசீலிக்கப்பட வேண்டுமெனில் குறைந்தபட்சம் 500 பேரின் கையெழுத்துகள் தேவை. தற்போதைய மனுவிற்கு மார்ச் 2 வரை கால அவகாசம் உள்ள நிலையில், ஏற்கனவே 360-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
வான்கூவரின் ரெக் பீச் போன்ற சில குறிப்பிட்ட ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஆடைகளின்றி இருக்க ஏற்கனவே சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. மேலும், பிரிட்டிஷ் கொலம்பியா உட்பட பல மாகாண நீதிமன்றங்கள் பெண்கள் பொது இடங்களில் மேலாடையின்றி இருப்பதற்கான உரிமையை உறுதி செய்துள்ளன.
எனினும், பிறருக்குத் தெரியும் வகையில் சொந்த இடத்தில் ஆடைகளின்றி இருப்பதும் கூட தற்போதைய சட்டப்படி சில நேரங்களில் குற்றமாகக் கருதப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.