போலியாகச் செயல்பட்ட ஆன்மீகக் குருவுக்கு 56 மில்லியன் டொலர் அபராதம்!
ஆன்லைன் மூலம் உலகளவில் சீடர்களை ஈர்த்து, பிரிந்த குடும்பங்கள் மற்றும் முன்னாள் ஆதரவாளர்களுக்கு எதிராக இணையவழி வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆன்மீகக் குரு லியானா ஷாந்திக்கு எதிராக 56 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவைச் சேர்ந்த மூவருக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென அமெரிக்காவின் ஹவாய் மாநில நீதிமன்ற நடுவர் மன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது.
ஹவாயை மையமாகக் கொண்டு இயங்கும் இவரது இயற்பெயர் லியான் வில்சன். தன்னை ஒரு சுயதொழில் மூலம் கோடீஸ்வரரான ஆன்மீக ஆசிரியர் என்றும், உலகளவில் 1,00,000 சீடர்கள் இருப்பதாகவும் அவர் கூறி வருகிறார்.

கனடாவின் சாஸ்காட்செவன் மாகாணத்தைச் சேர்ந்த பாலா ஹேகார்த், பைரன் மற்றும் ஸ்டெபானி ஹார்வத் ஆகிய மூன்று கனடியர்கள் மீது லியானா ஷாந்தி முதலில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
ஆனால், அந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த நீதிமன்ற நடுவர் மன்றம், லியானா ஷாந்தியே அவர்கள் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பியதாகத் தீர்ப்பளித்தது.
லியானா ஷாந்தியின் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றவர்களின் குடும்பத்தினரை இலக்கு வைத்து, அவர்கள் மீது "சாத்தானிய வழிபாடு செய்வோர்", "குழந்தைகளைத் துன்புறுத்துவோர்" மற்றும் "பில்லி சூனியம் வைப்பவர்கள்" எனப் பல பொய்யான குற்றச்சாட்டுகளை இணையத்தில் பரப்பி பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
இதேபோல் பல ஆண்டுகள் இணையவழித் தாக்குதலுக்கு ஆளான பாலா ஹேகார்த், வழக்குச் செலவுகளுக்காகவே தனது வீட்டை விற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாக வேதனையுடன் தெரிவித்தார்.