கனடாவின் உயரிய இராணுவ விருதை பெற்ற ஈழத் தமிழர்; குவியும் வாழ்த்து
கனடாவின் உயரிய இராணுவ விருதை ஈழத்தமிழரான வாகீசன் மதியாபரணம் பெற்றுள்ளார். யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான வாகீசன் மதியாபரணம் , கனடாவில் Order of Military Merit (M.M.M.) என்ற விருதை பெற்ற முதல் ஈழத்தமிழராக இவர் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
கனடாவின் ஆளுனர் ஜெனரல் வசிக்கும் Rideau Hall மாளிகையில் அவருக்கு விருது வழங்கப்பட்ட கௌரவிக்கப்பட்டது. மதியாபரணம் ஏறக்குறைய 30 ஆண்டுகள் கனடாவில் இராணுவத்தில் பணியாற்றி வருகின்றார்.

ஈழத் தமிழர்களுக்கு பெருமைமிகு வரலாறு
உள்நாட்டு போரால் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து கனடாவுக்கு வந்த அவர், சுமார் முப்பது ஆண்டுகள் கனடா இராணுவத்தில் பணியாற்றி, அண்மையில் ஓய்வுபெற்றார்.
விருதைப் பெற்ற பின்னர் வாகீசன் மதியாபரணம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகையில், இந்த விருது ஒரு பதக்கம் மட்டுமல்ல, என் கனவின் நிறைவேற்றம்,” என அவர் கூறினார்.

“அகதியாக வந்த ஒரு தமிழ் இளைஞன், கனடா என்ற தேசத்துக்கு பணியாற்றி, இன்று அதன் உயரிய மரியாதையைப் பெறுவது பெருமையாக உள்ளது. என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட போர் சூழல் காரணமாக 1988ஆம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்த வாகீசன், கனடிய இராணுவ பயிற்சிக் கல்லூரியில் இணைந்து பட்டம் பெற்று 1995ஆம் ஆண்டு கனடிய இராணுவத்தில் இணைந்து கொண்டார்.

அதன் தொடர்ச்சியான காலப் பகுதியில் கனடாவின் பாதுகாப்புப் படையின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபையிலும்,நேட்டோ நாடுகளின் சமாதானப் படையிலும் பணியாற்றுவதற்கு அழைக்கப்பட்டார்.
இவர் எமது தாயகத்தில் பொருளாதார கஷ்டங்களால் தமது கல்வியை சிறந்த முறையில் தொடர முடியாமல் உள்ள தமிழ் மாணவர்களின் நலன் கருதி, ‘தமிழ் மாணவர்கள் உதவித் திட்டம்’ (Tamil Students Assistance) என்னும் அமைப்பை சில நண்பர்களோடு இணைந்து ஆரம்பித்து தொடர்ந்து இந்த நற்பணியை ஆற்றி வருகின்றார் .

இந்நிலையில் அவரது சாதனை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், அகதியாக புதிய வாழ்க்கையைத் தொடங்கிய அனைவருக்கும், ஊக்கம் அளிக்கும் பெருமைமிகு வரலாறு எனப் பலரும் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.