ஈராக்கிலுள்ள அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தூதரகம் அவசர அறிவுறுத்தல்
ஈராக்கில் நிலவி வரும் ஆயுத மோதல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, அங்குள்ள அமெரிக்கக் குடிமக்கள் பாதுகாப்பான சூழல் கனிந்தவுடன் உடனடியாக அந்தநாட்டை விட்டு வெளியேறுமாறு பக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
அவசர காலப் பணியாளர்களைத் தவிர மற்ற அரச ஊழியர்கள் அனைவரும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், வெளியேற முடியாதவர்கள் போதிய உணவு, நீர் மற்றும் மருந்துகளுடன் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பக்தாத் மற்றும் எர்பில் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தங்களின் வழக்கமான சேவைகளை நிறுத்திவைத்துள்ளதோடு, போராட்டங்கள் மற்றும் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளன.
ஈராக் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளதால், தரைவழி எல்லைகள் வழியாக அண்டை நாடுகளுக்குச் செல்ல முற்படுபவர்கள் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல் அபாயங்களைக் கருத்தில்கொண்டு பயணிக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதம், கடத்தல் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை காரணமாக ஈராக்கிற்கு 'நிலை 4' (செல்ல வேண்டாம்) பயண எச்சரிக்கையை அமெரிக்க வெளியுறவுத் திணைக்களம் தொடர்ந்து நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.