இலங்கையில் பல கோடி ரூபா மோசடி செய்த கனடிய நிறுவனம்
இலங்கையில் பாரியளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டதாக கனடிய நிறுவனம் ஒன்றின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடிய நிதி நிறுவனம் ஒன்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் மக்களிடம் பாரிய அளவிலான நிதி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் முன்னணி ஊடகம் ஒன்று இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் மக்களிடமிருந்து மோசடியாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்டவர்ஸ் பொரிங் எக்சேன்ஜ் குரூப் (Metaverse Foreign Exchange Group Inc) என்ற MTFE நிறுவனத்தின் தலைமையகம் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த நிறுவனம் கனடாவின் நிதிச் சலவை கண்காணிப்பு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பதிவுகளையும் சரியான முறையில் மேற்கொண்டுள்ள ஓர் சட்ட ரீதியான நிறுவனம் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த நிறுவனத்தின் இணையத்தளம் செயலிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த இலங்கையர்கள் குறித்த நிதி முதலீட்டு சேவை செயலிழந்து உள்ளதாக குற்றம் சுமத்தி இருந்தனர்.
எனவே இந்த MTFE நிறுவனம் ஓர் பிரமிடு மோசடி திட்ட நிறுவனம் என இலங்கை மத்திய வங்கி பட்டியலிட்டுள்ளது.
பங்களாதேஷிலும் இதே விதமாக சுமார் ஐந்து லட்சம் மக்கள் குறித்த நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் சுமார் ஒரு பில்லியன் டொலர் வரையில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோசடிகள் தொடர்பில் இலங்கையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை இலங்கை அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
நிதிச்சலவையில் ஈடுபட்டதாக இந்த சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இயங்கிய நிறுவனத்தின் 900,000 டொலர் பணம் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிறிப்டோ நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு நாணயக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான முதலீட்டுத் திட்டத்தில் இவ்வாறு இலங்கை மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் பணத்தை முதலீடு செய்திருந்தனர்.
இந்த கனடிய நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மோசடியின் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.