ஆப்கானிஸ்தானிலிருந்து தப்ப முயன்ற கனேடிய குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்!

Sulokshi
Report this article
ஆப்கனின் காபூலில் விமான நிலையத்துக்கருகில் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து, அங்குள்ள கனேடியர்களை மீட்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் கனேடியர்கள் நம்பிக்கையிழந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.
இது குறித்து கனேடிய செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த கனேடியர் ஒருவர், வெளியே நடந்த பயங்கரம் தன் பிள்ளைகளுக்கு தெரியாமல் இருப்பதற்காக, அவர்கள் கவனத்தைத் திசை திருப்பும் வகையில், அவர்கள் கையில் மொபைல்கள், டேப்களைக் கொடுத்து விளையாடச் சொல்லியிருப்பதாக தெரிவிக்கிறார்.
13 ஆண்டுகளாக ரொரன்றோவில் தன் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த அவர், உறவினர்களைக் காண்பதற்காக ஆப்கானிஸ்தான் சென்ற நிலையில், தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில் , ஒரு நாள் பெட்டி படுக்கையுடன் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட தந்தையிடம், நாம் எங்கே போகிறோம் என்று அவருடைய ஐந்து பிள்ளைகளில் ஒருவனான ஆறு வயது மகன் கேட்க, பிக்னிக் செல்கிறோம் என்று கூறியிருக்கிறார் தந்தை. மெயின் ரோடு வழியாக சென்றால் தாலிபான்களிடம் சிக்கிக்கொள்வோம் என்று அஞ்சி எங்கெல்லாமோ சுற்றி வந்தும் அந்தக் குடும்பத்துக்கு, விமான நிலையத்தை அடைய முடியாமல் போயிருக்கிறது .
இதற்கிடையில் காபூலில் குண்டு வெடித்தனால், மீட்புப் பணி நிறுத்தப்பட்டுள்ளதுடன் , நிலைமை சீரடைவது வரை கனேடியர்கள் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருந்துகொள்ளுமாறும் கனடா அரசு கனேடிய குடிமக்களையும், வாழிட உரிமம் கொண்டவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.