அமெரிக்க ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய கனடிய பிரதமர்
கனடிய பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டதற்கு காரணமான “சுங்க எதிர்ப்பு” தொலைக்காட்சி விளம்பரம் தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த விளம்பரத்துக்கு எதிர்வினையாக டிரம்ப் கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்தி, கனடிய இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் 10 சதவீத சுங்கக் கட்டணம் விதிப்பதாக அறிவித்திருந்தார்.
“ஆம், நான் ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்டேன்,” என கார்னி தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அந்த விளம்பரம் மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் 1987 ஆம் ஆண்டு வழங்கிய தேசிய வானொலி உரையிலிருந்து எடுத்த காணொளி பகுதிகளை பயன்படுத்தியது. அந்த உரையில் ரீகன், “சுங்கக் கொள்கைகள் அமெரிக்க தொழிலாளர்களுக்கும் நுகர்வோருக்கும் தீங்கு விளைவிக்கும்” என வலியுறுத்தினார்.
கார்னி கூறியதாவது, அந்த விளம்பரம் ஒன்டாரியோ மாகாணத்தின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்டது, ஆனால் “அது நான் செய்திருக்கும் ஒன்று அல்ல” என்றும், டிரம்ப் அதனால் வருத்தப்பட்டார் என்றும் தெரிவித்தார்.
கார்னி தமக்கு மன்னிப்பு கேட்டதாக உறுதி செய்து, “நமக்குள் நல்ல உறவு உள்ளது, ஆனால் அவர் செய்தது தவறு” என டிரம்ப் வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களிடம், குறிப்பிட்டார்.
ஒன்டாரியோ முதல்வர் டக் போர்ட் அந்த விளம்பரத்தை ஒளிபரப்புவதற்கு முன் தமக்கு காட்டியதாகவும், அதை ஒளிபரப்ப வேண்டாம் என தாம் அறிவுறுத்தியதாகவும் கார்னி தெரிவித்தார்.