ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம்: அவதியுறும் டொராண்டோ பெண்
கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்த பெண்ணொருவரின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை ‘மெட்டா’ நிறுவனம் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிரந்தரமாக முடக்கியுள்ள நிலையில், அதற்குத் தீர்வு காண மனித அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடியாமல் சாட்பாட்களுடன் மட்டுமே உரையாட முடிகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
ஜேஸ்மின் ஆல்ட் எனும் அந்தப் பெண், கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி தனது கணக்குகள் நீக்கப்பட்டதிலிருந்து மெட்டா நிறுவனத்தின் எந்தவொரு பிரதிநிதியையும் தொடர்புகொள்ள முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவரது 20 ஆண்டுகள் பழமையான ஃபேஸ்புக் கணக்கு, 2011 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்த இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் தனது வளர்ப்பு நாய்க்காகப் பராமரித்து வந்த இன்ஸ்டாகிராம் கணக்கு ஆகியவையே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகத் தளங்களை நாம் எந்தளவுக்கு நம்பியிருக்கிறோம் என்பதை நினைக்கும்போது பயமாக இருக்கிறது. ஒரே நாளில் நமது அனைத்து நினைவுகளும் பறிக்கப்பட்டு விடுகின்றன," என ஜேஸ்மின் தெரிவித்துள்ளார்.
தனது தொடர்புகள் அனைத்தையும் இழந்துவிட்டதாகவும், இதனால் தான் தனிமைப்படுத்தப்பட்டது போன்று உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களுடன் மட்டுமே பேச முடிந்ததாகவும், அவற்றினால் தனது பிரச்சனைக்கு எவ்வித தீர்வும் வழங்க முடியவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சமூக ஊடகத் துறையில் மெட்டா பிரதான நிறுவனமாக இருக்க விரும்பினால், வாடிக்கையாளர்கள் எளிதில் தொடர்புகொள்ளக்கூடிய வகையில் சேவை வசதிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதேபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவிலும் பதிவாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.