தென்னாபிரிக்காவில் கனடியருக்கு ஏற்பட்ட பெருந்துயரம்
தென்னாப்பிரிக்காவின் உலகப் புகழ்பெற்ற கிருகர் தேசிய பூங்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 69 வயதான கனடிய சுற்றுலாப் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் ஒரு எதிர்பாராத விபத்தாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூங்காவின் வழிகாட்டி வைத்திருந்த துப்பாக்கி உண்மையானதா இல்லையா என்று குறித்த கனடியப் பயணி கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளதாக தென்னாப்பிரிக்க பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட கனடியப் பயணி, பூங்காவிற்கு வெளியே தங்கியிருந்த ஒரு சுற்றுலாக் குழுவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் பூங்காவிற்குள் உள்ளூர் பாரம்பரிய முறைப்படியான இரவு நேர பார்பெக்யூ விருந்தான ‘புஷ் ப்ராய்’ நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
69 வயதான கனடிய சுற்றுலாப் பயணி, துப்பாக்கியை ஏந்தியிருந்த தனியார் வழிகாட்டியிடம் சென்று, 'இது உண்மையான துப்பாக்கியா?' எனக் கேட்டுள்ளார்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக, அது உண்மையான துப்பாக்கிதான் என்பதை வழிகாட்டி செய்துகாட்ட முயன்றபோது, துப்பாக்கி எதிர்பாராதவிதமாக இயங்கியுள்ளது.
இதனால் பாய்ந்த தோட்டா, சுற்றுலாப் பயணியின் மேல் உடற்பகுதியில் பலமாகத் தாக்கியுள்ளது. துப்பாக்கிக் குண்டு பாய்ந்த வுடனேயே அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.
முதற்கட்ட தகவல்களின்படி, தனியார் வழிகாட்டியின் கவனக்குறைவால் துப்பாக்கி இயங்கியதே இந்த மரணத்திற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக தென்னாப்பிரிக்கப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். துப்பாக்கியை அலட்சியமாகக் கையாண்டமை மற்றும் கவனக்குறைவினால் ஏற்பட்ட மரணம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழிகாட்டிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது.