இலங்கை அரசாங்கத்தின் தடைநீக்கத்திற்கு கனடிய தமிழர் பேரவை வரவேற்பு!
ஜனாதிபதி ரணில் தலைமையிலான இலங்கை அரசாங்கம் புலம்பெயர் அமைப்புகள் சில தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைக் கனடிய தமிழர் பேரவை வரவேற்றுள்ளது.
அதேநேரம் உறுதியான தொடர் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறதாகவும் கனடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இது குறித்து கனடிய தமிழர் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் ,
இலங்கையில் இன உறவுகள் மற்றும் பொருளாதார விளைவுகள் மேம்படும் வகையில் புதிய இலங்கை அரசாங்கத்தால் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைக் கனடிய தமிழர் பேரவை (CTC) வரவேற்கிறது.
எவ்வாறாயினும், ஓகஸ்ற் 1, 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பல தமிழ், முஸ்லிம் அமைப்புக்கள், தனிநபர்கள் இன்னும் தடைப் பட்டியலில் இருப்பது ஏமாற்றத்தையளிக்கிறது.
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்தல், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துத் தனியார் காணிகளையும் விடுவித்தல், வடக்கு கிழக்கை இராணுவமயமாக்கலில் இருந்து விடுவித்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைக் கனடிய தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையி்ல் 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்திற்கு முழுமையாக இணங்குமாறும் கனடிய தமிழர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் , தற்போதைய தீர்மானத்தின் அனைத்து அம்சங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றுமாறும் இலங்கை அரசாங்கத்தைக் கனடிய தமிழர் பேரவை வலியுறுத்துகிறது