கனடிய பல்கலைக்கழகங்களில் கற்க ஆர்வம் காட்டும் அமெரிக்கர்கள்
அமெரிக்காவில் வாழும் மாணவர்கள் அதிக அளவில் கனடா பல்கலைக்கழகங்களில் கற்க ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்குக் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கும் மத்திய நிதியை குறைப்பதும், வெளிநாட்டு மாணவர்களின் வீசாக்களை ரத்து செய்வதும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
2025 கல்வியாண்டுக்கான பாடநெறிகளுக்காக, மார்ச் 1 வரை அமெரிக்க குடிமக்களிடமிருந்து பெறப்பட்ட முதுநிலை கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள், 2024ஆம் ஆண்டு முழுவதையும் விட 27% அதிகரித்துள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் (UBC) வான்கூவர் கிளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், அதிகரித்திருக்கும் இந்தக் கோரிக்கையை பதிலளிக்க, UBC பல்கலைக்கழகம், சில முதுநிலை பாடநெறிகளுக்கான அமெரிக்க விண்ணப்பங்களை விரைவாக செயலாக்கும் திட்டத்துடன், இந்த வாரம் மீண்டும் நுழைவு விண்ணப்பங்களை திறந்துள்ளது.
கனடாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான டொரொன்டோ பல்கலைக்கழகம், 2025 பாடநெறிகளுக்கான ஜனவரி முடிவுத் திகதிக்கு முன்பாகவே அமெரிக்காவிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த விண்ணப்பங்கள் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாக டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைளே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகம் பல பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் நிதியை உறைவாக முடக்கியது, மற்றும் பலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்கேற்ற வெளிநாட்டு மாணவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் வீசாக்களை ரத்து செய்துள்ளது. இதனால், அமெரிக்காவில் பேச்சு சுதந்திரம் மற்றும் கல்வி சுதந்திரம் குறித்த கவலைகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.