கனடா காட்டுத்தீ புகையால் மொன்ரியல் பகுதியில் காற்றுத் தர எச்சரிக்கை
கனடாவின் காட்டுத்தீகளில் இருந்து பரவும் புகை காரணமாக, மொன்ரியல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற கனடா நிறுவனம் காற்றுத் தர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
காற்றில் புகையின் அளவு அதிகரிக்கும் போது, உடல்நல அபாயங்களும் அதிகரிக்கும். மக்கள் வெளியில் செலவிடும் நேரத்தை குறைக்க வேண்டும். வெளிப்புற விளையாட்டுகள், நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க அல்லது குறைக்க பரிசீலிக்க வேண்டும் என கனடா வானிலை நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
காட்டுத்தீ புகை காரணமாக பொதுமக்களுக்கு கண், மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல், தலைவலி, லேசான இருமல் போன்ற சாதாரண அறிகுறிகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, சிலருக்கு மூச்சுத்திணறல், மார்பு வலி மற்றும் கடுமையான இருமல் போன்ற தீவிர அறிகுறிகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள், ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் அல்லது நீண்டகால நோய்களைக் கொண்டவர்கள், மேலும் வெளிப்புறங்களில் பணிபுரிபவர்கள் காட்டுத்தீ புகையால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என தெரிவித்துள்ளது.
இவர்கள் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை குறைக்க அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்றும், உடல்நல அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காட்டுத்தீ புகை காரணமாக கனடாவின் பல நகரங்களில் வானம் புகைமூட்டத்துடன் காணப்படுவதுடன், பொதுமக்களின் உடல்நலத்தை பாதுகாக்க அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.