பயங்கரவாத குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட கனடிய பெண்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஸ்குவாமிஷ் பகுதியைச் சேர்ந்த கிம்பர்லி போல்மன் என்ற பெண், பயங்கரவாதக் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஐஎஸ் தீவிரவாதி ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு சிரியாவுக்குச் சென்றவர் ஆவார்.
'ஒரு பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காகக் கனடாவை விட்டு வெளியேறியது' என்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

இவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. 2019-ஆம் ஆண்டு குர்திஷ் படையினரால் கைது செய்யப்பட்ட இவர், சிரியாவில் உள்ள சிறப்பு முகாமில் சுமார் நான்கு ஆண்டுகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். 2022-ஆம் ஆண்டு கனடாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
இணையவழி மூலமாக அறிமுகமான நபரைத் திருமணம் செய்வதற்காகவே 2015-இல் சிரியா சென்றதாகவும், தனது செயல்களுக்குப் பொறுப்பேற்கும் வகையிலேயே இக்குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் குழு தெரிவித்துள்ளது.
தற்போது ஐஎஸ் அமைப்புடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அந்த அமைப்பினரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சுவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் கூறியுள்ளனர். இவருக்கான தண்டனை விவரங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.