கனடாவில் 104 வயதான உலகின் மிக மூத்த ஆமைக்கு அறுவை சிகிச்சை
கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வசித்து வரும் 'கஸ்' என்ற 104 வயது நிரம்பிய 'கோஃபர்' வகை ஆமைக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சிறுநீர்ப்பை கல் அகற்றப்படவுள்ள நிலையில், உலகம் முழுவதுமிருந்து அதற்காக அன்பும் நல்வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
உலகின் மிக மூத்த 'கோஃபர்' வகை ஆமையாகக் கருதப்படும் 'கஸ்', 1922-இல் பிறந்ததாக நம்பப்படுகிறது.
வனப்பகுதியில் இவை வழக்கமாக 60 ஆண்டுகள் வரை மட்டுமே வாழும் நிலையில், கஸ் 104 ஆண்டுகளைக் கடந்து வாழ்கிறது.

1942-ஆம் ஆண்டு புளோரிடாவில் வெறும் 5 டாலருக்கு வாங்கப்பட்ட இந்த ஆமை, கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது.
நாள்தோறும் பார்வையாளர்களுடன் இணைந்து உலாவருவது இதன் சிறப்பு. 2009-ஆம் ஆண்டிலேயே இதற்குக் கல் இருப்பது கண்டறியப்பட்டாலும், அப்போது ஓட்டைத் துளைத்து மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.
ஆனால் தற்போதைய மருத்துவ வளர்ச்சியால், அதன் காலில் சிறிய வெட்டுக்காயத்தை ஏற்படுத்தி இக்கல்லை எளிதாக அகற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை குறித்த அறிவிப்பு வெளியான கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான வாழ்த்து அட்டைகள், ஓவியங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான நெகிழ்ச்சியான பதிவுகள் குவிந்துள்ளன. பல தலைமுறைகளாக மக்கள் இந்த ஆமையைக் கண்டு மகிழ்ந்து வந்துள்ளனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில வாரங்கள் 'கஸ்' ஓய்வில் இருக்கும் என்றும், அது ஆரோக்கியமாக மீண்டு வர அருங்காட்சியகப் பணியாளர்களும் கால்நடை மருத்துவக் குழுவினரும் முழு நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.