அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் வலுக்கும் முரண்பாடுகள்...
கடந்த 12 நாட்கள் அமெரிக்க பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடிய தொழிலதிபர் ஜாஸ்மின் மூனி மீண்டும் வான்கூவாருக்கு திரும்பியுள்ளார்.
கடந்த 3ம் திகதி அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் வீசா பெற்றக்கொள்ள முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்றைய தினம் அவர் வான்கூவார் விமான நிலையத்தில் தரையிறங்கினார். "இன்னும் முழுமையாக எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை.
பல நாட்கள் தூங்கவில்லை, சரியான உணவும் சாப்பிடவில்லை" என மூனி கனடிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தம்மை ஏன் கைது செய்தார்கள் என்பதற்கான தகவல்களை எந்த அதிகாரிகளும் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
"என்ன நடக்கிறது என்றே எனக்கே தெரியாது. நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகங்கள் எனக்கு ஆதரவாக இருந்ததனால் தான் இப்போது வீட்டிற்கு வந்துள்ளேன் என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மூனி ஏற்கனவே ஒரு அமெரிக்க வீசாவை ரத்து செய்ததனை ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும் புதிய வேலை வாய்ப்பு கிடைத்ததால், புதிய வீசா பெற்றுக்கொள்வதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவை தனதாக்கி விடுவதாக மிரட்டல் விடுத்துள்ள நிலையில், மூனியின் சம்பவம் கனடியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.