அமெரிக்கா - கனடா இடையே எல்லை தாண்டிய பயணம் அதிகரிப்பு!
அரசியல் மற்றும் வர்த்தக ரீதியிலான பதற்றங்கள் நீடித்து வரும் நிலையிலும், கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான எல்லை தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் இருபுறமும் அதிகரித்துள்ளதாகக் கனடா புள்ளிவிவர திணைக்களம் தெரிவித்துள்ளது.
கனடாவைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குச் சென்று திரும்பிய பயணங்களின் எண்ணிக்கை 2.3 மில்லியனாக உயர்ந்துள்ளது.இது கடந்த ஆண்டை விட 5 சதவீதம் அதிகமாகும்.
அதேபோல, அமெரிக்க வாழ் மக்கள் கனடாவிற்கு மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை 3 மில்லியன் ஆக உயர்ந்து, 6.1 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

சாலை வழியாக வாகனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.
அதேசமயம், இரு நாடுகளுக்கும் இடையேயான வான்வழிப் பயணம் சற்று குறைந்துள்ளது. சில சுற்றுலாப் பயணிகள் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை ஆதரித்துச் சுற்றுலா மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.
எனினும், அரசியல் சூழல் காரணமாகக் கனடாவின் உள்ளூர் இடங்களிலேயே விடுமுறையைக் கழிக்க விரும்புவதாகச் சிலர் கூறியுள்ளனர்.
நீண்டகாலப் புள்ளிவிவரங்களின்படி, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரிப்பதற்கு முன்பிருந்த அளவை விட, கனடியர்களின் அமெரிக்கப் பயணம் இன்னமும் 24.6 சதவீதம் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.