செலவுகளை குறைத்துக் கொண்ட கனடிய மக்கள்
கனடாவில் பொருளாதார நிச்சயமற்றத் தன்மைகளின் காரணமாக மக்கள் செலவுகளை குறைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு செலவுகள் குறைக்கப்பட்டாலும் மக்கள் தங்களது தனிப்பட்ட நிதி நிலைமையைப் பற்றிய நம்பிக்கையை மீண்டும் பெறத் தொடங்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
எம்.என்.பீ MNP Ltd. எனும் நிறுவனம் நடத்திய ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் அதன் மூலம் உலக பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து உள்ள அண்மை நிலைமைகள் காரணமாக, கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் சுமார் 75% பேர் தங்கள் அத்தியாவசிய செலவுகளை குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
முக்கியமான பொருட்கள் கொள்வனவு செய்வதனை காலம் தாழ்த்தி வருவதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வரிப்போர் இன்னும் முழுமையாக கனடாவின் குடும்ப செலவுகளைப் பாதிக்கவில்லை என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வட்டி விகிதங்கள் இன்னும் மக்களை கவலைக்குள்ளாக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகவே தொடர்ந்தாலும், சமீபத்திய வட்டி விகிதக் குறைப்புகள், மக்கள் செலவுத் திட்டத்தில் சற்றே சுதந்திரத்தை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.