அமெரிக்காவை விட்டுவிட்டு வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் கனேடிய மக்கள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரிவிதிப்பு மிரட்டல்களை, கனேடிய அரசியல்வாதிகளை விட அதிக சீரியஸாக கனேடிய மக்கள் எடுத்துக்கொண்டுள்ளதுபோல் தெரிகிறது.
கனடா மீது கூடுதலாக 25 சதவிகித வரிகள், கனேடிய கார்கள் மீது 100 சதவிகித வரிகள் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிக்கொண்டே இருக்கிறார்.
பதிலடி நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக தெரிவித்தும், கனேடிய அரசு வரிகள் தொடர்பில் முழுமையான முடிவு எடுத்ததுபோல் தெரியவில்லை.
ஆனால், மக்கள் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கத் தயாராகிவிட்டார்கள்.
கனடா மீது அமெரிக்கா வரிகள் விதிக்கும் விடயம், நீண்ட நாள் நண்பனுக்கு துரோகம் செய்யும், அவமதிக்கும் விடயம் என ஏற்கனவே கனேடிய மக்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
ஆக, அவர்கள் தங்கள் அதிரடி நடவடிக்கையை துவங்கிவிட்டதுபோலிருக்கிறது.
ஆம், அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்திருந்தோர் பலர் அதை ரத்துசெய்து வருவதாக கனேடிய ட்ராவல் ஏஜண்டுகள் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவுக்கு பதிலாக, வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்ததன் மூலம் தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்திவருகிறார்கள் கனேடிய மக்கள்.
அமெரிக்காவின் பிரபல சுற்றுலாத்தலங்களான, Palm Springs, Orlando மற்றும் Phoenix ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்லும் சர்வதேச சுற்றுலாப்பயணிகளில் முதலிடம் வகிப்பவர்கள் கனேடியர்கள்தான்.
ஆக, இம்முறை அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க கனேடிய மக்கள் முடிவு செய்துள்ளதால், அந்த சுற்றுலாத்தலங்கள் கடுமையாக பாதிக்கப்பட இருக்கின்றன என்கிறார்கள் ட்ராவல் ஏஜண்டுகள்.
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்பவர்களில் 10 சதவிகிதம் குறைந்தாலே, அமெரிக்காவுக்கு சுமார் 2.1 பில்லியன் டொலர்கள் இழப்பும், 14,000 அமெரிக்கர்களுக்கு வேலை இழப்பும் ஏற்படும் என்கிறது அமெரிக்க பயண கூட்டமைப்பு.
2024ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவுக்கு அதிகம் சுற்றுலா சென்றவர்கள் கனேடியர்கள்தான். 20.4 மில்லியன் கனேடியர்கள் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றதால், அமெரிக்காவுக்கு 20.5 பில்லியன் டொலர்கள் வருவாய் கிடைத்துள்ளதுடன், 140,000 அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பையும் அது உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |